Thursday, October 21, 2010

”எங்களிடம் 100 நண்பர்களைக் கொடுங்கள்..!” வளமான பாரதத்தை உருவாக்க சவால்விடும் விவேகானந்தர் யூத் கிளப்

உதவாக்கரை, உருப்படாதது, தருதலை, போக்கிரி இப்படி ஊர சுத்தி நல்ல பேரு வாங்குபவர்கள் நம் இளைஞர்களாகத்தான் இருக்க முடியும். அதிலும் ஒருவராக அல்லாமல் குழுவாக இருந்தார்களேயானால் இந்தத் திட்டும் இரட்டிப்பாகும். நாலு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் நாதாரித்தனம்தான் செய்வார்கள் என்கிற ரீதியிலான எழுதப்படாத சட்டம் ஒன்று நம் மக்களின் மனதில் பதிந்துள்ளது. இது முற்றிலும் தவறான எண்ணம் என்பதை செயலில் காட்டி வியக்கவைத்துள்ளனர் சென்னை நண்பர்கள். இவர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்துவதுதான் விவேகானந்தர் இளைஞர் மன்றம். வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னை வந்து படித்துக்கொண்டிருக்கும் இவர்கள் அனைவருமே சமுதாயத்தின் மீதான ஒரே அகலப்பார்வை கொண்டவர்கள் என்கிற அடிப்படையிலேயே நண்பர்களாகி, இன்று நட்பு காட்டிய வழியில், பலருக்கும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். “நாங்க எல்லாருமே ஃபிரெண்ட்ஸோட பிரெண்ட்ஸ்தான். எல்லாருக்குமே இந்தக் குழுவுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஒருவருக்கொருவர் பழக்கம். ஆனா நாங்க சமுதாயத்துக்கு எதாவது செய்யணும்ங்கிற ஒரே எண்ணத்தோட வந்ததால, எங்கள் பிரெண்ட்ஷிப் மேல ரொம்ப அதிக நம்பிக்கையும், மரியாதையும் இருக்குது.
பொதுவா இளைஞர்கள் சேர்ந்தா சினிமாவுக்குப் போகணும், ஊர் சுத்தணும், நல்லா எஞ்சாய் பண்ணனும்னுதான் நினைக்குறாங்க. அதுக்காக நாங்க இதெல்லாம் துறந்துட்டு தியாகிகளா செயல்படல. இதுவும் எஞ்சாய் செய்யுறதுக்கான ஒரு வழிதான்னு பொறுப்பற்ற நிறைய பேருக்கு எடுத்துக்காட்டத்தான் இந்த அமைப்பத் தொடங்கினோம். இந்த மாதிரி இளைஞர்கள் சேர்ந்து கிளப் தொடங்குறது ஒண்ணும் புதுசுயில்ல. எங்களோட செயல்முறைகள்தான் எங்கள வித்தியாசப்படுத்திக் காட்டணும்னு ஆசப்பட்டோம்” என்று சொல்லும் குழுவின் தலைவரான ஸ்ரீகா, ஒரு பொறியியல் மாணவி. எந்த மாதிரி வித்தியாசப்பட்டு செயல்படுறீங்க? என்று கேட்டோம். “நாங்க எல்லாத்தையுமே ரொம்ப ஆக்கப்பூர்வமா செய்யணும்னு நினைக்குறோம். எங்களோட நோக்கம் யூத் டிராண்ஸ்பர்மேஷன் என்று சொல்லப்படும், இளையோர் மனமாற்றத்திற்கானதே ஆகும். இதுல நாங்க டார்கெட் வச்சிருக்குறது எட்டாவது முதல் பணிரெண்டாவதுவரை படிக்கும் மாணவர்கள்தான். நாங்க இவங்களுக்கு விழிப்புணர்வுன்னு எதுவும் சொல்றதுல்ல. எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து, இவங்களையே விழிப்புணர்வ ஏற்படுத்தச் சொல்றோம். பிறர்க்கு ஒரு விஷயத்த சொல்லும்போது தானும் அத மனரீதியில ஏத்துக்க வேண்டிய கட்டாயத்த ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுத்துறோம். அதுதான் நாங்க எதிர்பார்க்குற மன மாற்றத்தை எங்களுக்கு எடுத்துக் காண்பிக்குது. ரொம்ப மனநிறைவா இருக்குது” என்று சொல்கிறார் இந்தக் குழுவின் அட்வைசராக இருக்கும் சாஃப்ட்வேர் பிரொபஷ்னலான உமா. நீங்கள் எத்தனை நாட்களாக இதை செய்கிறீர்கள்? என்னென்ன மாதிரியான நிகழ்வுகளை நடத்தி முடித்திருக்கிறீர்கள்? என்று கேள்விகளை அடுக்கினோம்.
“நாங்க எங்களோட குழுவத் தொடங்கி சரியா ஏழு மாசம் ஆகுது. முதல் நிலையில் ஒரு சில மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லங்களுக்குப் போனோம். அவங்களோட, நிறைய நேரத்த செலவு செஞ்சோம். பின் எங்களோட டார்கெட் நிர்ணயித்தப் பிறகு, நாங்கள் மயிலாப்பூர் மாங்கொல்லையிலிருக்கும் கற்பகவள்ளி நடுநிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்தோம். அங்க முதலில் மாணவர்கள எங்களோட பேசச் செய்யுறதுக்காக ஒரு சில நிகழ்வுகள நடத்தி, பின் அவங்களுக்கெல்லாம் நாங்க பேவரெட் அக்கா,அண்ணன்களா மாறுனதும் வாழப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி ஒரு சில அறிவு சார்ந்த விஷயங்கள சொல்லிகொடுக்கத் தொடங்குனோம். மாணவர்கள குழுக்களா பிரிச்சு எங்க குழுவினர் பயிற்சி கொடுத்தாங்க. வாழ்க்கையியல், கல்வி, சமூகத்தை எதிர்கொள்ளுதல், கெட்டவையிலிருந்து ஒதுங்கி இருத்தல், மன தளர்ச்சியுறாமல் இருத்தல் என்று பல்வேறு விஷயங்களை நன்குப் பதியச் செய்தோம். இண்டெர்நெட்டிலிருந்து பல ஊக்கம் தரும், தேசப் பற்றைத் தூண்டும் காட்சிகளை டவுன்லோட் செய்து பிரொஜெக்ட் செய்கிறோம். இன்னைக்கு அந்த மாணவர்களோட மனநிலையில பெரிய மாற்றம் தெரியுது. நாங்க ஞாயிற்றுக்கிழமையிலதான் அவங்கள பார்க்கப் போவோம். ஆனா நாங்களே கிளம்புறோம்னு சொன்னாலும்கூட விடமாட்டாங்க.
இந்த மாணவர்களத் தொடர்ந்து நாங்க கையிலெடுத்தது ஆரணி பக்கத்துல இருக்கிற விண்ணமங்கலம் கிராம மாணவர்களை. அங்க இருக்குற ஒரு சில பெரிய மனிதர்களோட வேண்டுதலின் பேரில் நாங்க அங்கப்போனோம். ஒரு சர்வே மாதிரி போய் பார்த்தோம். அங்க இருக்குற எந்த ஒரு மாணவனுக்கும் லைஃப்ல பிடிப்பு இல்லாதத கண்கூடா பார்க்க முடிஞ்சுது. பெற்றோர்களுக்கு படிப்போட மகத்துவம் தெரியல. ரொம்ப சிரத்தையெடுத்து நாங்க அவங்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். சொன்னா யாருமே நம்பமாட்டாங்க, ரெண்டே நாள்ல அவங்களுக்கு அவ்ளோ விஷயங்கள எடுத்துக்குற மனப் பக்குவம் வந்திருக்கு. நாங்க போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பசங்க ரொம்ப ஒழுக்கமா நடந்துக்குறாங்களாம். அடிக்கடி எங்கள பத்தி அவங்க டீச்சர்ஸ்கிட்ட கேக்குறாங்களாம். தொடர்ந்து மாதமொருமுறை அங்கப்போய் வெறும் 50 சதவீதம்கூட இல்லாத அவங்களோட ரிசல்ட 100 சதவீதமாக்கணும்ங்கிறதுதான் எங்களோட இப்போதைய கனவு. இவை இல்லாம முதலுதவி குறித்த விழிப்புணர்வு முகாம், மரம் நடும் விழாக்கள்னு அவ்வபோது செஞ்சுகிட்டு இருக்கோம்” என்று தங்கள் பணிகளை விவரித்தார் லா காலேஜ் மாணவியான ராஜேஷ்வரி.
படிக்கும் வயதில் நிகழ்வுகளுக்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்? போக நேரம் உங்களுக்கு கிடைக்கிறதா? “படிக்கிற பசங்களுக்கு டைம் இல்லண்ணு சொன்னா அதுதாங்க மிகப்பெரிய காமெடி. இருக்குற டைம ஒழுங்கா யூஸ் பண்ணுனாலே நெறைய செய்யலாம். அது ஒண்ணும் பிரச்சினையேயில்ல. செலவுகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் என்கிற ரீதியில் மாதத்திற்கு முப்பது ரூபாய் ஒவ்வொரு உறுப்பினரிடமும் பெறுகிறோம். அத வச்சுதான் எல்லா செலவுகளையும் செய்யுறோம். இது போக ஒரு சில பெரிய மனிதர்கள் ஒவ்வொரு வகையில சர்டிபிகேட் அடிக்க, பரிசு கொடுக்கனு உதவி செய்யுறாங்க” என்று சொல்லும் ஸ்ரீகாவிடம், அடுத்தடுத்த பிளான்களைப் பற்றி கேட்டோம்.
“ஏற்கனவே நாங்க சிறப்பான மாணவர்கள்னு தேர்ந்தெடுத்திருக்குற கற்பகவள்ளிப் பள்ளியைச் சேர்ந்த பத்து பேரையும் எங்க குழுவினுடைய பயிற்சியாளர்களா சேர்த்து விண்ணமங்கலத்துக்கு அழைச்சிட்டுப் போக இருக்குறோம். இப்படி எங்க குழுவ ஒரு பெரிய அளவுல சமுதாயத் தாக்கத்துக்கு தயார் செய்யுறோம். மேலும் அடுத்த பிராஜெக்டா எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளிக்கு செல்ல இருக்கிறோம். அதற்காக எங்களை நாங்களே தயார் செஞ்சுகிட்டு இருக்கோம். மேலும் ஒரு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, சிறைச்சாலை பிராஜெக்டும் பிளான் செஞ்சிருக்கோம்” என்று மகிழ்ச்சியாக குறிப்பிடுகிறார் ராஜேஷ்வரி. “இதுமட்டுமில்லாம எங்க குழுவுக்குள்ள இருக்கக்கூடிய நண்பர்களுக்குள்ளும் ஒருவருக்கொருவர் உதவியா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கோம். எங்க நட்பைப் போலவே எங்க குழுவும் பெரிய அளவுல வளரணும்னு ஆசப்படுறோம்” உங்க குழுவுக்கு ஏதாவது தடைகள் இருப்பதாக உணர்கிறீர்களா?
“அப்புடி பெருசா தடைகள்னு எதுவுமில்ல. பணப்பிரச்சினை கொஞ்சம் இருக்கு. அத சமாளிச்சுடலாம். ஆனா எங்களோட பயிற்சிக்கு ரொம்ப அத்தியாவசியமா இருக்குற பிரொஜெக்டர் குறைந்த வாடகைக்கு யாராவது தர முன்வந்தா ரொம்ப சந்தோஷப்படுவோம். எங்க குழுவுல இதுவரை 50 பேருதான் இருக்கோம். இன்னும் நிறைய நண்பர்கள் சேர்ந்தா நிச்சயமா நிறைய விஷயங்கள் செய்ய முடியும்னு நினைக்குறேன். பலருக்கும் ஏதாவது செய்யணும்னு தோணும். ஆனா எப்புடி ஆரம்பிக்குறதுன்னுதான் தெரியாது. அப்புடி சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறவங்கள சிவப்புக் கம்பலத்தோட வரவேற்கிறோம்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் உமா. நட்பால் இணைந்த இந்த இளைஞர்களின் வரலாறு நிறம் மாறுவதை நன்றாகவே உணர முடிகிறது. “கனவுகள் அல்ல.. காரியம் துணை..”- ஓயாமல் எதையோ நோக்கி உழைக்கும் இவர்களை பார்க்கும்போது தெளிவாகும் உண்மை இதுதான். வாழ்த்துவோம், வளரட்டும் நாளைய சமூகத்தின் இன்றைய சிற்பிகள். இவர்களுக்கு உதவ நினைப்போர், இவர்களோடு சேவையில் கை கோர்க்க நினைப்போர், தொடர்புக்கு 9360403330.
வெளியீடு: புதிய தலைமுறை, ஆகஸ்ட் 12 இதழ்...

No comments:

Post a Comment